Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாணவர்களின் உயிரை பறித்த பாதை சேவை சட்டவிரோதமானது!



திருகோணமலை கிண்ணியா குறிச்சாக்கேணி பாதை சேவை சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்தது என்பது தெரியவந்துள்ளது. 


இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதை விபத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறுபேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


குறித்த பாதையில் எவ்வளவு பேர் பயணம் செய்தவர்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலையில் மீட்பு குழுவினர் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிண்ணியா குறிச்சாக்கேணி வீதியில் , குறிச்சாக்கேணி களப்பின் ஊடாக இப்பால நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றது. 


கிண்ணியா பிரதேச சபை மற்றும் , கிண்ணியா நகர சபை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் நீளம் 120 மீட்டர் ஆகும். இப்பாலம் 75 கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. 


அந்நிலையில் பால நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குறிச்சாக்கேணி களப்பின் ஊடாக சட்டவிரோத பாதை சேவை இடம்பெற்று வந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இரண்டு சிறிய தோணிகள் ஒன்றிணைத்து பாதையாக அதனை மாற்றி பாதுகாப்பு அற்ற வகையில் களப்பின் ஊடாக சேவை இடம்பெற்றது. 


பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் இலவசமாகவும் சைக்கிளுக்கு 20 ரூபாயும் , மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாயும் , முச்சக்கர வண்டிக்கு 50 ரூபாயும் அறவிட்டு உள்ளனர். 

பாதை சேவையில் ஈடுபடும் போது , எத்தனை பேரை ஏற்றுகின்றார்கள் , எத்தனை வாகனங்களை ஏற்றுகின்றார்கள் , பாதை எத்தனை கிலோ பாரத்தை தாங்க கூடியது என்பது தொடர்பில் எந்த கண்காணிப்பும் இல்லாத நிலையிலும் , எவ்விதமான பாதுகாப்பும் அற்ற நிலையிலையே மக்கள் பயணித்து வந்துள்ளனர். 


குறித்த பாதுகாப்பற்ற சேவைகள் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடங்களில் பலர் பதிவுகளையும் செய்திகளையும் பகிர்ந்துள்ளனர். 
துரதிஷ்ட வசமாக அவை எதனையும் அதிகாரிகளோ , அரசியல்வாதிகளே கவனத்தில் எடுக்காத நிலையில் இன்றைய தினம் பெரும் அனர்த்தம் ஏற்பட்டு மாணவர்களின் உயிர்கள் பிரிந்துள்ளன. 

இந்நிலையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்,  "இந்த பாலம் புனரமைக்கும் விடயம் குறித்து இதற்கு முன்னரும் நான் இதே சபையில் முன்வைத்தேன்.

உரிய அமைச்சரிடம், பதில் பாதையொன்று உருவாக்காது எவ்வாறு பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றது என கேள்வி எழுப்பிய வேளையில் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இதனை ஒரு கேவலமான அல்லது நகைப்புக்குரிய விடயமாக எடுத்துக் கொண்டார். 

அதற்கான விளைவாக இன்று பல உயிர்கள் காவுகொடுக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக படகு பாதை யாருடைய அனுமதியுடன் இயங்குகின்றது. சட்டமுறைப்படி இயங்குகின்றதா? யார் பொறுப்பு? இதற்கு அரசாங்கம் கூறும் பதில் என்னவென நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.


அதேவேளை, சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் " எவருடைய அனுமதியும் இல்லாத வகையில் படகுப்பாதை  சேவைகளை முன்னெடுத்ததன் விளைவாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சிறிய படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியமையே இதற்கு காரணம். வீதி புனரமைப்பு அதிகாரசபையின் அனுமதி இல்லாது எவ்வாறு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.


அதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா , "உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நஷ்டஈடுகளை வழங்க வேண்டும் எனவும் , பாதை சேவை குறித்து விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் , பால நிர்மாண பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நாடாளுமன்றில் கோரியுள்ளார்.

அசண்டையீனங்களும் பொறுப்பற்ற தன்மைகளாலும் ,பாரிய விபத்துக்களும் உயிரிழப்புகளும் அதிகரித்தே செல்கின்றன.  ஒவ்வொரு சம்பவங்களின் பின்னரும் , உயிரிழப்புகளின் பின்னரும் மக்கள் மத்தியில் கொதி நிலை காணப்படும் , பின்னர் அது ஆறியதும் , மீண்டும் ஒரு சம்பவத்தின் போது கொதி நிலை ஏற்படும். 

மக்களின் கொதி நிலையினால் தற்காலிக தீர்வு காணப்பட்டாலும் மீண்டும் உரியவர்களிடம் பொறுப்பற்ற தன்மையும் , அசண்டையினமும் ஏற்பட்டு விடும் என்பதே கவலைக்குரிய விடயமாகும். 

No comments