Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மனை டிசம்பர் 4ஆம் திகதிக்கு பின்னரே சுதந்திரமாக வழிபட முடியும்


யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. 

அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில் , மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. 

பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர். 

அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று , விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில என்பன களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட  கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், , பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையிலையே கடந்த திங்கட்கிழமை முதல் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திற்கு தினமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். 

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்னர். 


No comments