குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை நினைவுச் சுடரினை இந்து மதகுரு கா.புவனேந்திரசர்மா ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், தென்னிந்திய திருச்சபை வணபோதகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும் அப்போது தனது 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றிவைத்தனர்.
நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை சிவஞானம் சிறிதரன், குமுதினி நினைவேந்தல் குழு தலைவர் வி.ருத்திரன் ஆகியோர் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலித்தனர் .
அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதேவேளை காலை 8.00 மணிக்கு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், தென்னிந்திய திருசசபை ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் இடம்பெற்றது.
No comments