பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் பர்வேஸ் ஹொசைன் எமோன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், முகமது நைம் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நுவான் துஷார, தசுன் சானக மற்றும் ஜெஃப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்படி, 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெந்திஸ் 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், பெத்தும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
No comments