முல்லைத்தீவு முள்ளிவாய்கால் பகுதியை சேர்ந்த மூவர் மீது முல்லைத்தீவு பொலிசார் தாக்கியசம்பவம் தொடர்பாக வவுனியா மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை இடம்பெற்றது.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள்கடந்த மே மாதம் ஆறாம் திகதி இரவு தாக்குதல் நடாத்தியதாக தாக்குதலுக்குள்ளானவர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டுவந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரியுமே தம்மீது தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்ததுடன்,இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற நிலையில் முறைப்பாடு தேவையில்லை நீதிமன்றம் சென்று நீங்கள் எதிர்பார்ப்பதை நாம் தருகிறோம் என்று கோரியதாக பாதிக்கப்பட்ட நபர்கள்குற்றம் சுமத்தினர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.அது தொடர்பான விசாரணை இன்றயதினம் இடம்பெற்றது. விசாரணைக்கு சம்பந்தபட்ட பொலிஸ் அதிகாரி,மற்றும் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர்,பாதிக்கப்பட்டோர் சமூகமளித்திருந்தனர்.
இது தொடர்பான விசாரணை இன்றயதினம் இடம்பெற்று முற்றுப்பெறாத நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் சமூகமளிக்குமாறு மனித உரிமை ஆணையகத்தால் இருதரப்புக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.









No comments