எமது மக்களுக்கு சமவுரிமை, மொழி ரீதியாக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கிருபா லேணர்ஸ் அதிபர் அ.கிருபாகரன் தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணல்
கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பயணிப்பது எவ்வாறு உள்ளது? உங்கள் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்:- ஐக்கிய மக்கள் சக்தியை தேசிய அணி என்று கூறினாலும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ எமது மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் என்பதால் எமது வெற்றிவாய்ப்பு அதிகமாகவுள்ளது.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்களை இலக்கு வைத்துள்ளது?
பதில்:- இரண்டு ஆசனங்களை இலக்கு வைத்துள்ளோம்
கேள்வி:-உங்கள் தரப்பு மீது மக்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது? உங்கள் திட்டங்கள் என்ன?
பதில:- எங்கள் தரப்பு மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. அதேவேளை எமது மாகாணம்,மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம்.
எமது மாகாணம் மற்றும் மாவட்டம் பல்வேறு துறைகளில் பின் தங்கியுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது பாரிய சவாலாகவுள்ளது.
எனவே புதிய தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்குப் போதியளவு வேலைவாய்ப்புக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கல்வியில் முதலாவது மாவட்ட யாழ்.மாவட்டத்தைக் கொண்டுவருவதோடு விளையாட்டு, சிறு கைத் தொழில்துறை போன்றனவற்றை முன்னேற்றத் திட்டங்களை வகுத்துள்ளோம். கடற்றொழிலாளர்களுக்கு மானியங்கள் அடிப்படையில் உதவிகள், நிவாரணங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விவசாயத்தை முன்னேற்றுவது போன்ற பல்வேறு திட்டங்களை மக்கள் மயப்படுத்த எண்ணியுள்ளோம்.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஒரு வேட்பாளராக நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?
பதில்:- நாங்கள், எமது மக்களுக்கு சமவுரிமை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம். மொழி ரீதியாக முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவிற்குத் தான் வடக்கு - கிழக்கில் மக்கள் பெருவாரியாக தமது வாக்குகளையளித்திருந்தனர். அந்த ஆதரவுத் தளம் இப்போதும் உள்ளதா?
பதில்:- ஜனாதிபதித் தேர்தலின் போது காணப்பட்டதைவிட இப்போது அதிகமாகவுள்ளது. சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்தபோது வடக்கு - கிழக்கில் பல்வேறு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடுகளை வழங்கியுள்ளார்.
இன்னும் அதிகளவான வீட்டுத்திட்டங்கள் எமது மக்களுக்குத் தேவையாகவுள்ளது.
அதேவேளை சில இடங்களில் வீட்டுத்திட்டங்கள் முழுமைபெறாமல் உள்ளன. எனவே, வீட்டுத் திட்டங்கள் தேவைப்படும் மக்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் பூரணப்படுத்தப்படாமல் உள்ள வீடுகளைப் பூரணப்படுத்தவும் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.
அபிவிருத்தி தொடர்பாக எமது மக்களுக்கு முழுமையான வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதேவேளை உரிமைசார் போராட்டங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தேசியக் கட்சி. அதனுடன் இணைந்து பயணிக்கக் காரணம் என்ன?
பதில்:- இப்பொழுது எமது மக்களுக்கு அபிவிருத்தி தான் முக்கிய தேவையாகவுள்ளது.
முழுமையான அபிவிருத்தியை இலக்கு வைத்துத்தான் நாங்கள் ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றோம்.
அவ்வாறு இணைந்து பயணிக்க வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம்.
பாராளுமன்றத்தைப் பொருத்தவரை பெரும்பான்மையாக தேசிய கட்சிகள் தான் உள்ளன.
தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் போதுதான் பாராளுமன்றத்தில் எமது மக்கள் சார்பாகப் பேசி அதிகப்படியான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எமது மக்களுக்கான முழுமையான அபிவிருத்தியே எமது இலக்கு. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாகவும் அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேர்காணல் - எஸ்.ஆர்.கரன்








No comments