Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் சுயவிவரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும்


“இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிவரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விவரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இணுவிலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

மக்களின் வரிப்பணத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டவேலை திட்டங்கள் தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளினால் திறப்பு விழா செய்யப்பட்டு திறக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்தோடு இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிவரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது அவரின் பணிப்பிலா இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது. இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விவரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார்கள். எனினும் தற்போது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ராணுவ தலையீடு அதிகரித்து வருகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களில் அரச அதிகாரிகள்கூட அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள்.

தற்போது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் முன்னைய காலங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை. அந்த நிலமை இந்த அரசால் மாற்றப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே எதிர்வரும் காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்க முடியும் – என்றார்.

No comments