பொதுத்தேர்தல் முடிவுகளினால், பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் சட்ட உதவிகளை பணமின்றி செய்துத் தர தமது தரப்பினர் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “சசிகலா ரவிராஜு விரும்பினால் அவருக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
தேர்தல் ஆட்சேபனை மனுவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவரது குடும்பத்தினரின் ஒருசதம் பணம் செலவின்றி பொதுமக்களே அந்த விடயங்களை பொறுப்பேற்று பல சட்டத்தரணிகள் இலவசமாக வாதாடக்கூடிய நிலைமையை எம்மால் உருவாக்க முடியும்.
இலங்கையில் வன்முறைக்கு எதிரான கண்காணிப்பு நிலையத்தின் பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளோம்.
அவர்களும் சம்பவத்தினத்தன்று அங்கு வந்திருந்ததுடன் எனது வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.
எனவே அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றேன். நீங்களும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்வதுதான் நல்ல விடயம் என்று கூறியுள்ளேன்.
சசிகலா ரவிராஜும் இவ்விடயம் தொடர்பாக மனு கையளிப்பாராயின் அதனுடன் சேர்த்து 5 மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தும்.
எதிர்காலத்திலாவது இவ்வாறான ஜனநாயக மீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் இடம்பெறாமல் இருக்கவேண்டுமாயின் இந்த விடயத்துக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.









No comments