Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி!



தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதியானது அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் தொடர்ந்துவரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை புதன்கிழமை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 100மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments