Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 11 நாட்களில் 101 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்



யாழ். மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 101 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவும், எதிர்வரும் நாட்களில் இந்நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்ப்பதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர். ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற ஒன்றுகூடல்கள், விழாக்கள், பயணங்களை தவிர்ப்பதுடன் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு  கேட்டுள்ளார். 
 
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
 
சுகாதார நடைமுறைகளானது சரியாக பின்பற்றப்படாத நிலையில் கோரோனா பரவல் தீவிரமடையுமென அஞ்சப்படுகின்றது. 
 
தீவிரமடைந்துவரும் கோரோனா தொற்று பரம்பல் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கீழ்வரும் நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
பலர் ஒன்றுகூடும் வகையில் நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியினை பெற்றபின்பே நடாத்தப்பட வேண்டும்.  
 
மேலும், அவ்வாறு அனுமதி பெறப்பட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றியே நடாத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.  
 
பொது மண்டபங்களில் நடாத்தப்படும் திருமணங்களில் ஆகக்கூடியது மொத்தமாக 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளுதல் வேண்டும். வீடுகளில் நடாத்தப்படுகின்ற திருமண நிகழ்வுகளை 50 பேருக்கு மேற்படாமல் நடாத்துதல் வேண்டும்.  இறுதிச் சடங்குகள் (கொரோனா அல்லாத உயிரிழப்புகள்) ஆகக்கூடியது 50 பேருடன் 24 மணித்தியாலங்களிற்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். 
 
இறுதிச் சடங்கிற்காக வேறு மாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வந்து பங்குபற்றுவதை இயன்றளவு தவிர்க்கவும்.
 
பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் வீட்டிலேயே நிகழ்த்தப்பட வேண்டும். மண்டபங்களில் இவ்விழாக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 
 
கட்டாயம் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் மட்டும் சுகாதார மருத்துவ அதிகாரியின்  முன் அனுமதியுடன் 150 பேருக்கு மேற்படாது நடாத்தலாம். நிகழ்வின் முடிவில் பங்குபற்றியவர்களின் பெயர் விவரங்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
 
வணக்கஸ்தலங்களில் நடாத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே ஒருநேரத்தில் கலந்துகொள்ள முடியும். அன்னதானங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றன நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
 
பாடசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் நடாத்தப்படுகின்ற  விளையாட்டு நிகழ்வுகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பார்வையாளர்களுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும். வேறு எந்தவொரு கேளிக்கை நிகழ்வுகளிற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
 
பாடசாலைகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட வேண்டும். 
 
தனியார் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும் மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியை தொடர்ச்சியாக பேணுவதும் உரிமையாளர்களின் பொறுப்பாகும். 
 
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக முழுநேரமும் சரியான முறையில் முகக்கவசம் அணிவதுடன் பயணத்தின் போது இயன்றளவு சமூக இடைவெயினைப் பேணி பயண முடிவில் கட்டாயமாக கைகளை முறைப்படி கழுவுதல் அல்லது தொற்நீக்கியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். அத்துடன் இயன்றளவு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 
 
மேலும் பயணத்தின் போது உரிய சமூக இடைவெளியை பயணிகளுக்கிடையில் பேணுவது நடாத்துனர் மற்றும் வாகன சாரதிகளின் பொறுப்பாகும். 
 
தொற்று அபாயமுள்ள இடங்களான சந்தைகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதார தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், சந்தைக் குத்தகைக்காரர்கள்  மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாற்றுபவர்கள் மற்றும் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments