தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் 09 மீனவர்கள் மயிரிழையில் உயிர்தப்பி கரை சேர்ந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நேற்றைய தினம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர்,
பாம்பனில் இருந்து 27 கிலோ மீற்றர் தூரத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இரவு 09.30 மணியளவில் இலங்கை கடற்படையினர் , தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக எச்சரித்து வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர், பின்னர் படகுகளை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
அதில் பாம்பணை சேர்ந்த லிம்போர்ட் என்பவரின் விசைப்படகு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியது. அதில் இருந்த மீனவர்கள் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினார். கரை திரும்பிய மீனவர்கள் இன்றைய தினம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மூன்று மாத காலத்திற்கு மேலாக மீன் பிடி தடை காலத்திற்கு பின்னர் மீன் பிடிக்க செல்லும் போது தம் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்வதாகவும் , இதனால் தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதுடன் , தமது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்படுவதனால் , மத்திய , மாநில அரசுகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







No comments