ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மனப்பயம் காரணமாகவே வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வழமை போன்று ஆடை தொழிற்சாலைக்கு சென்ற ஊழியர்கள் சுகவீனமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி ஒவ்வாமை காரணமாகவே ஊழியர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டதாகவும் , 68 ஊழியர்கள் அவ்வாறு சுகவீனம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனை சுகாதார பணிப்பாளர் மறுத்துள்ளார். தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அவர்களுக்கு சுகவீனம் ஏற்படவில்லை எனவும் , மனப்பயம் காரணமாகவே அவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் வவுனியா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் நேற்று முன்தினம் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நிலையில் நேற்றைய தினம் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments