Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கறுப்பு ஜூலை படுகொலை நினைவு சுவரொட்டிகள் மீது கழிவொயில் பூசப்பட்டுள்ளது


வெலிக்கடை சிறைப் படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதனை தடுப்பதற்கு  இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாகவும் ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்து ரெலோ வடக்குக் கிழக்கு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன் தொற்றுக் காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு மாவட்ட மட்ட அஞ்சலி நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.


இந் நிலையில் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் (27) வலிகாமம் கிழக்குப் பகுதியில் உரும்பிராய் பகுதியில் சுவரொட்டி ஒட்டிய போது உரும்பிராய்ச் சந்தியில் கன்டர் வாகனத்தில் தரித்து நின்ற பெருமளவான இராணுவத்தினர் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுத்தனர். 

பின்னர் என்னுடன் நின்றிருந்தவர்களின் கைளில் இருந்த சுவரொட்டிகளை பறிக்க முயற்சித்தனர். நாம் வழங்கவில்லை. இதனையடுத்து எமக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இராணுவத்தினர் எம்மை பிரதேசத்தினை விட்டு வெளியேறுமாறு கூறினர். எனினும் நாம் எமது பிரதேசத்தில் நடமாடுவதை தடுக்க நீங்கள் யார் என கேட்டேன். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை சுற்றிச் சுற்றி படம் எடுத்து எங்கோ வட்சப் அனுப்பினர்.

கறுப்பு யூலை நாடறிந்த உலகறிந்த படுகொலை இதை நினைவு கூர்வதை எவரும் தடுக்க முடியாது என்றோம். நான், நீங்கள் எந்த இராணுவ முகாமைச் சேந்தவர்கள் எனக் கேட்டேன். அவ்வாறு தங்கள் எந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் கூறமுடியாது என்றனர். பின்னர் உரும்பிராய் சந்தியில் இருந்து நாம் வெளியேறியவுடன் அவ்வாறாக முரண்பட்ட இராணுவத்திற்குப் புறம்பாக பீல் பைக்கில் நான்கு இராணுவத்தினர் எனது பிக்கப்பிற்கு முன்னும் பின்னுமாக குறிப்பிட்ட தூரம் பின்தொடர்ந்து  பின்வாங்கிச் சென்றனர்.


இதேவேளை நாம் திரும்பி வரும் போது வல்லைப் பகுதி, ஆவரங்கால், புத்தூர் என சகல இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கழிவு ஒயில் பூசி மறைக்கப்பட்டிருந்ததுடன் சுவரொட்டிகள் அகற்ற கூடிய அளவிற்கு அகற்றப்பட்டிருந்தது.

இவ்வாறாக நினைவு கூர்வதற்கான உரிமை இராணுவ மயமாக்கலின் மூலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருடாவருடம் எமது கட்சி எமது தலைவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது. ஆனால் இம்முறை நினைவுகூரலை தடுப்பதற்கு கடும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுவதாக
ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

No comments