Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

`ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’ என அமைச்சரின் வீட்டில் எழுதிய கொள்ளையன் கைது!


திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லைப் புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோதும், இந்த பங்களாவில்தான் குடும்பத்துடன் தங்கியிருந்தார் துரைமுருகன். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் பங்களாவில் தங்கிப் பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்குப் பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். அந்தசமயம், சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால், துரைமுருகன் பங்களாவுக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருக்கலாம் என்று நினைத்து, மர்ம கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியானது.துரைமுருகன் பங்களா என்றவுடன் பெருத்த ஆசையுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பணம், விலையுயர்ந்த பொருள்கள் எதுவுமே இல்லை என்றதும் கடுப்பாகிவிட்டனர். அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து சுவரில், ‘‘நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’’ என நக்கலாக எழுதியிருந்தனர். அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய்கூட இல்ல, எதுவும் எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ‘இவ்வளவு துணிச்சல் யாருக்கு வந்தது?’ என்பதுதான் காவல்துறையினரையே ஆச்சரியப்பட வைத்தது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தும் விசாரணையைத் துரிதப்படுத்தியிருந்தார், அப்போதைய திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இதையடுத்து, துரைமுருகன் பங்களாவுக்குப் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி விஜயகுமார் இடமாறுதலாகிச் சென்றுவிட்டார். திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்த, ஐ.பி.எஸ் அதிகாரி சிபிசக்கரவர்த்தி, திருப்பத்தூர் எஸ்.பி-யாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சிபிசக்கரவர்த்தி வந்தப் பின், அனைத்து காவல் நிலையங்களிலும் கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் மீண்டும் தூசு தட்டப்படுகின்றன. அந்த வகையில், துரைமுருகன் பங்களாவில் நடந்த கொள்ளை வழக்கு விசாரணையும் தீவிரமடைந்தது. ஏற்கெனவே, பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாணியம்பாடியைச் சேர்ந்த நவித் என்ற இளைஞரைப் பிடித்துவந்து தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது, ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று, வாணியம்பாடி ஆசிரியர் நகரிலுள்ள ஆசிரியர் வீட்டிலும், ஜூலை 13-ஆம் தேதியன்று, முஸ்லிம்பூர் அபு பக்கர் தெருவிலுள்ள ஒருவரின் வீட்டிலும் சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்ளையடித்துள்ளதை நவித் ஒப்புக்கொண்டார்.

துரைமுருகன் பங்களாவிலும் கைவரிசை காட்டியதுடன் கிண்டலாக எழுதி வைத்துவிட்டுச் சென்றதும் நான்தான் என்று கூறியிருக்கிறார், நவித். ஆனால், துரைமுருகன் பங்களா வழக்கில், முக்கிய குற்றவாளி ஒருவர் இருக்கிறார். அவர் வேலூரைச் சேர்ந்தவர். அவர்தான் என்னை துரைமுருகன் பங்களாவில் கொள்ளையடிக்கக் கூட்டிச்சென்றார். எங்களுடன் எலெக்ட்ரீசியன் ஒருவரும் வந்திருந்தார். சி.சி.டி.வி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை ஒரு மலை அடிவாரத்தில் உடைத்து எரித்துவிட்டோம். பின்னர், கேரளாவுக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் மும்பைக்குத் தப்பிவிட்டேன். சமீபத்தில்தான் வந்தேன் என்றும் கூறியிருக்கிறார், நவித். இதையடுத்து, நவித்தை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 20 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், வேலூரைச் சேர்ந்த கொள்ளையன் உட்பட அவரின் கூட்டாளிகளைப் பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறது, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை.

நன்றி :- விகடன் 

No comments