Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நோயாளிகள் சங்கடத்துக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாம்!


கொவிட் நோய்த் தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட சில பிரதான நகரங்களில் உள்ள வைத்தியாசாலைகளுக்கு நாளாந்தம் வருகை தருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு வருகை தருகின்ற நோயாளர்களின் நோய்த் தொற்றை உறுதி செய்துகொள்ளும் போது ஏற்படுகின்ற நெரிசல் காரணமாக, அவர்கள் சங்கடங்களுக்கு ஆளாகக் கூடாதென, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சில பிரதான நகரங்களுக்கு அண்மையில், மேலதிக சிகிச்சை நிலையங்கள் பலவும், கடந்த மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவோர் அவசர நிலையிலும் தொற்றாளர்கள் சங்கடத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்காகவே அந்நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், முதலாவதாக மேலதிக சிகிச்சை நிலையங்களுக்கும் பின்னர் நோயாளியின் நிலைமையை அவதானித்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி ஏற்றல் மற்றும் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் பொதுமக்கள் சங்கடத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றைத் திட்டமிடுவதற்கு, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் நேரடியாகப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்றும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கு அவசியமான வழிகாட்டல்களை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்தும் அறிவுறுத்துதல்களை வழங்குவது, சுகாதார நிபுணர்களின் பொறுப்பாகுமென்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரண்டாவது தடுப்பூசியை வழங்குகின்ற எந்தவொரு மத்திய நிலையத்திலும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கக்கூடிய அளவுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. மூன்றாவது தடுப்பூசியை வழங்க வேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது. இருப்பினும், நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகப் பொதுமக்கள் வழங்குகின்ற பங்களிப்பு குறைந்துள்ளமை கவலைக்குறியதாக உள்ளதென, விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதத்தில், நாடு பூராகவும் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொது மக்கள் ஒன்றுகூடுவது, நாடு பூராகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளதென்று, புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பலர், தேசிய ஒளடதங்களை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். அது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும், தேசிய ஒளடதங்களை தினம்தோறும் பயன்படுத்தல் மற்றும் முகத்துக்கு நீராவி பிடித்தல் போன்றவை, நோய்த் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதாக, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

அமைச்சர்களான காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரோஹித்த அபே குணவர்தன, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments