நாட்டில் வாகன இறக்குமதிக்கான தடையை அடுத்த ஆண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
வரும் நவம்பரில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளைத் தயாரிப்பது குறித்து அனைத்து அமைச்சுகளுக்கும் கடுமையான வழிகாட்டுதல்களை நிதி அமைச்சு வெளியிட்டது என்று திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என கொழும்பு ஆங்கில வாரேடான சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தொடர்ச்சியான செலவினங்களில், அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான திறைசேரியின் சுற்றறிக்கை, புதிய ஆள்சேர்ப்புக்கு அடுத்த ஆண்டு எந்த புதிய ஒதுக்கீடும் ஒதுக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக 2021 ஜூலை முதலாம் திகதியில் உள்ளவாறு பணியாளர் விவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.
ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் இதரக் கொடுப்பனவுகள் விகிதங்களுக்கான விதிமுறைகளைத் தவிர, வேறு எந்த வகை மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அல்லது இதரக் கொடுப்பனவுகள் மதிப்பீடுகளில் சேர்க்கப்படக்கூடாது என்று திறைசேரியின் செயலாளர் எஸ்ஆர் ஆட்டிக்கல வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனச் செலவினங்களில், பொருளாதாரத்திற்கு முதலீட்டின் விரைவான வருவாயை வழங்கும் அபிவிருத்திச் செலவுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்கள் கட்டுவதை நிறுத்தி வைக்க அரசு எடுத்த முடிவு வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறிய பழுது தேவைப்படும் பொருளாதார ரீதியாக சாத்தியமான கட்டடங்களைப் புதுப்பிப்பதன் மூலம் அரச நிறுவனங்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் அரசின் முடிவுக்கு ஆதரவாகவும், செலவினங்களைக் குறைப்பதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான வாகனங்கள் வாங்குவது அடுத்த ஆண்டும் நிறுத்தப்படும்.
அரச நிறுவனங்களில் ஏற்கனவே உள்ள வாகனங்களை பழுதுபார்ப்பதன் மூலம் வாகனத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலமையை கட்டுப்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது, கரிம உரங்கள் தயாரித்தல், சுற்றுலாத் துறையை புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகள், ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளிட்ட தொடர்ச்சியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகள் போன்ற முன்னுரிமைத் துறைகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கு முன் செலவின மதிப்பீடுகளை சமர்ப்பிக்குமாறு அரச அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி மீதான தடையின் மூலம், அரசினால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடிந்தது என்று தெரிவித்த திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர், கட்டுப்பாடுகளைத் தொடர முடிவினால் சேமிப்பை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன் மற்றும் பத்திரக் கொடுப்பனவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கோவிட் -19 நிலமை காரணமாக சுற்றுலாத் துறையிலிருந்து சுமார் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு இடைவெளியை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்
No comments