என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டு பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் மட்டுமே என்று கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன்; கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதிர்க்கு?. நான் 7வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார் என்று கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், தங்கம், பணம் , சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது,
மொத்தமாக என்னிடம் இருந்த நகைகள் 300 பவுண் மட்டுமே. மேலும் என்னிடம் லொக்கரில் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறியது உண்மை அல்ல. மொத்தமாக ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே என்னிடம் இருந்தது. அதையும் என்னிடம் திரும்ப அளித்து விட்டனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
மேலும் என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சொன்ன மணல் நான் வீடு கட்டுவதற்காக ரசீதுடன் வாங்கி வைத்துள்ளேன். எனவே அதையும் சரிபார்த்து என்னிடமே திருப்பி அளித்து விட்டனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது.
நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன், என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது. என்னிடம் உள்ள ரோல்ஸ் ராயஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் தான். நான் 7வது படிக்கும் போதே, எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார்.
மேலும் நான் சிறுவயதிலிருந்தே வியாபார குடும்பத்தைச் சார்ந்தவன், எனவே என்னிடம் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணமோ, ஒரு அடி நிலம் கூட கணக்கில் வராத நிலமும் இல்லை என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஆடம்பரத்தை விரும்பாதவன், கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு? எனது குழந்தைகள், என்னுடைய எதிர்காலத்திற்கு எங்களது தொழில் இருக்கிறது. அதுபோதும். பொது வாழ்க்கையில் எனக்கு தேவையில்லாதது. வைரத்தையும், தங்கத்தையும் கட்டி கட்டியாக வைத்து நான் சாப்பிடவா போகிறேன்? அதுபோல ஆசைபடுபவன் நான் இல்லை.
நான் பெரும்பாலும் ஆடம்பரத்தை விரும்புவதே இல்லை. மோதிரமோ, செயினோ போட மாட்டேன். என்னை அடித்து போட்டால் கூட சட்டை பாக்கெட்டில் ரூ.10 கூட இருக்காது என்னிடம். கார்கள் மீது மட்டும் ஆசை உண்டு. அதனை வாங்கி வைத்து அழகு பார்ப்பது சிறு வயிதில் இருந்து பொழுபோக்காக நான் மேற்கொள்வது. சமூக வலைத்தளங்களில் என்னிடம் கோடி கோடியாக பணமும், வைரம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வரும் பொய்யான தகவல்கள் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே என்னிடம் கணக்கில் வராத எந்தவிதமான நகையோ, பணமோ, பொருளோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்படவில்லை என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments