தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பாவித்து, துப்பாக்கி முனையில் அவர்களை முழங்காலிட வைத்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் பதவியை பறித்து , அவரை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலைக்கு கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத் துப்பாக்கியுடன் உட்புகுந்த அமைச்சர் உடன் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
நண்பர்கள் சகிதம் சென்ற சிறைச்சாலைகள் நிர்வாகம், கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எமது தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பயன்படுத்த அத்த சிறைச்சாலை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.
அதனால் இரு அரசியல் கைதிகளை தன் முன்நிலையில் முழங்காலிட வைத்த இராஜாங்க அமைச்சர் அவர்களது தலையில் கைத் முப்பாக்கியை வைத்துள்ளார்.
இந்த நாட்டில் சிறைச்சாலை அட்டூழியம் ஒன்றும் புதிதல்ல அதனை எந்த அரசும் காலம் காலமாக மேற்கொண்டே வந்துள்ளன. இதன் வெளிப்பாடாகவே அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகள் மீது துப்பாக்கியை வைத்த அமைச்சரையும் அவரது கூட்டத்தையும் கைது செய்வதற்கு பதிலாக அதிகாரிகளும் காவலர்களும் அமைச்சருக்கு சாமரம் வீசுவதில் கவனம் செலுத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமாகியுள்ள நேரத்தில் திட்டமிட்ட வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியா என்ற சந்தேகமும் எழுவதனால் குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், என்பதோடு இதற்கு துணைபோன அதிகாரிகள், ஆயுதங்களுடன் உட் செல்ல அனுமதித்த காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.







No comments