மன்னாரில் 14 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்
அதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தாயார் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதனை அடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார், குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும் மன்னார் நீதவானிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலைப்படுத்தினர்.
இதன் போதே மன்னார் நீதவான், குறித்த 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னணி
கள்ளியடி பகுதி கிராம சேவையாளருக்கு சொந்தமான மில்லுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அரிசி திரிப்பதற்காக குறித்த சிறுவன் சென்றுள்ளான்.
சிறுவன் அரிசி திரித்துக்கொண்டு வீடு திரும்பிய நிலையில் , மில் உரிமையாளரான கிராம சேவையாளரின் மகனும் , இன்னும் சிலரும் சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மில்லில் இருந்த பணத்தினை காணவில்லை. சிறுவன் தான் திருடிவிட்டான் என கூறி சிறுவனை வீட்டிற்குள் வைத்து தாயின் கண் முன்னால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
அதன் போது , தாய் மகனை தாக்கியவர்கள் கால்களில் விழுந்து கதறி அழுத்த போதிலும் , தாயையும் கால்களால் உதைந்து தாக்கி விட்டு சிறுவனை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
அடி தாங்க முடியாது சிறுவன் கதறி அழுத நிலையில் சிறுவனை சமாதானப்படுத்தி , தாயார் தூங்க வைத்துள்ளார்.
மகன் தூங்கிய பின்னர் தாயார் குளிக்க சென்று விட்டு , திரும்பும் போது , மகனை தாக்கிய கும்பல் மீண்டும் தனது வீட்டுக்குள் இருந்து வெளியேறி சென்றதனை அவதானித்த தாய் , வீட்டிற்குள் சென்ற பார்த்த போது , தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பலே மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments