Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

29,900 மெட்ரிக் தொன் சீனி அரசுடமையாக்கப்பட்டது!


பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெட்ரிக் தொன் சீனியை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 
 
களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, இன்று (01) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல அவர்கள் தெரிவித்தார்.
 
இந்தச் சீனித் தொகை, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோர் பெருமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல், 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அன்றைய நாளில், நாட்டுக்குள் 88,878 மெட்ரிக் தொன் சீனி காணப்பட்டது.
 
2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என, நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
 
 உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35,000 மெட்ரிக் தொன் ஆகும். இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
 
நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி, நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி, அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.
 
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், 2021-08-30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
 
இதன் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து, சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கவும், ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இந்நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் தெரிவித்தார்.
 
2021-09-01இல் அரசுடமையாக்கப்பட்ட சீனித் தொகை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு,
 
Pyramid Wilmar Company - முத்துராஜவெல - 6,200மெட்ரிக் தொன்
 
Global Trading Company - 809/5, நீர்கொழும்பு வீதி, மாபோல,
 
 வத்தளை- 4,800 மெட்ரிக் தொன்.
 
Global Trading Company - 242, உஸ்வெட்டகெய்யாவ, வத்தளை - 4100மெட்ரிக் தொன்.
 
Wilson Trading Company - (களஞ்சியசாலைத் தொகுதி 04) - 14,000மெட்ரிக் தொன்.
 
R.G. Stores - ஹுணுபிட்டிய வீதி, கிரிபத்கொட - 800மெட்ரிக் தொன்.
 
மொத்தம் 29,900 மெட்ரிக் தொன்.







No comments