Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். பல்கலைக்கழகப் பொதுபட்டமளிப்பு ஒக். 7


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்  பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாத் தொடர்பில்  தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு விபரிக்கும் போதே கலாநிதி கே. சுதாகரன் இவ்வாறு தெரிவித்தார். 
 
இந்த விவரிப்பின் போது பல்கலைக்கழப் பதிவாளர் வி. காண்டீபன், மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்து  கொண்டனர். 

35 ஆவது பொதுப்  பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர்  07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என்றும்,    நாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின் அதனை ஒக்ரோபர் 07 ஆம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும்,  கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
எனினும் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவதற்குச் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்தி மாணவர்களுக்கான பட்டங்கள் உறுதிப்படுத்தப்படுத்துவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

நிகழ்நிலைப் பட்டமளிப்புக்குத் தங்கள் இணங்கவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க் கிழமை துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். 
 
இதனையடுத்து துணைவேந்தரின் வேண்டுகோளுக்கமைய மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் உள்வாங்கி, பட்டமளிப்பு விழாக் குழுவின் விசேட கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில், எதிர்வரும் ஒக்ரோபர் 07 ஆம் திகதி நிகழ்நிலையில் நடாத்தி பட்டங்களை உறுதி செய்வதென்றும், தற்போதைய நிலைமைகள் சீரடைந்ததும் மரபு ரீதியான பட்டமளிப்பு வைபவத்தை மிகக் குறுகிய காலத்தினுள் நடாத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகளையும், பல்கலைக்கழக அலுவலர்களையும் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குழுவினால் முன்மொழியப்படும் திகதிகளில் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கென சுகாதார சேவைகள் திணைக்கள அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இதே குழு மேற்கொள்ளவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments