Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எத்தியோப்பியாவில் தனிநாடு கோரிய போராளிகள் மீது தாக்குதல்: 5,600பேர் உயிரிழப்பு!


எத்தியோப்பியாவில் தனிநாடு கோரி போராடி வரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5,600 போராளிகள் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவின் மூத்த இராணுவத் தளபதி பாச்சா தெபெலீ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இறந்தவர்கள் தவிர, 2,300 போராளிகள் காயமடைந்திருப்பதாகவும், இரண்டாயிரம் பேர் பிடிபட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், எந்த காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.

இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது பிராந்தியம் முழுமையாக அரசாங்க துருப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

கூட்டாட்சி துருப்புக்கள் நவம்பர் 28ஆம் திகதி, டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லைக் கைப்பற்றியது, இப்போது இப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரசாங்கம் வெற்றியை அறிவித்த போதிலும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்கள் மோதலை தொடருவதாக கூறியுள்ளனர்.

இப்போது வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், உணவு, நீர் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த சண்டையால் பல பத்து இலட்சம் பேர் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக எத்தியோப்பியாவை ஆட்சி செய்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டாட்சி துருப்புக்களுக்கும் படையினருக்கும் இடையே நவம்பரில் தொடங்கிய போரினால், இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடான சூடானுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த சண்டையால் டைக்ரே பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

No comments