அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்குள் சிக்குண்டு இனத்தை அடியோடு அழிக்க, மதங்கள் ஊடாக மோதலை தூண்டி விடும் திட்டங்களை சிலர் முன்னெடுத்துள்ளதாக வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு பகுதியில் பிள்ளையார் ஆலயமொன்றில், பிள்ளையாரை அகற்றிவிட்டு, அந்தோனியாரை பிரதிஷ்டை செய்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பவம் தொடர்பிலான உண்மை நிலை என்ன என்று அறிய முடியாமல் உள்ளது. எனினும் இப்படி ஒரு சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். மதம் பிடித்த மதவாதிகளின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நானும் ஒரு கிறிஸ்தவன் தான். ஆனாலும், ஒன்றை எம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் 1505 ம் ஆண்டு இலங்கைக்கு போர்த்துக்கீசர் வருகை தராமல் இருந்திருந்தால் இன்று நாம் எல்லோரும் நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருட்த்திராட்ச மாலையுடன் தான் இருந்திருப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.
வேதாகமத்திலோ அல்லது இயேசு நாதரோ எங்கும் கூறவில்லை பிரிதொரு மதத்தை இழிவு படுத்த சொல்லி, ஏன் இயேசு நாதர் கூட தன்னை வணங்குங்கள் என்று கூட கூறியது இல்லை. தன்னை பின்பற்றுங்கள் என்பதை தான் கூறியுள்ளார். ஆனால் இங்கிருக்கும் சில விஷ கிருமிகள் (இரு மதத்திலும்) தமிழர் இடையில் பிரச்சினைகளை உண்டு செய்து அதில் குளிர்காய நினைத்து ஒரு இனத்துக்குள் இரு பிரிவை உருவாக்குகிறார்கள்.
கடந்த கால எமது ஈழ வரலாற்றை பார்த்தால் யாரும் எப்பொழுதும் இப்படியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதில்லை. பம்பரில் குண்டு போடும் போது, கிறிஸ்தவ கோவில்களுக்குள்ளும், சைவ கோவில்களுக்குள்ளும் ஓடி மறைந்து உயிரை காப்பாற்றிக்கொண்ட வரலாறுகளை மறக்க வேண்டாம். அப்பொழுதெல்லாம் நீ கிறிஸ்தவன் நான் சைவர் என்று கூறி யாரும் அந்த கோவில்களுக்குள் தஞ்சம் புகாமல் இருந்தீர்களா..?
இன்று அப்படி ஒரு பிரச்சினை இல்லை என்டதும், புது பிரச்சினையை உருவாக்குகிறார்கள். தமிழன் ஒற்றுமையாக இருந்தால், உலகை ஆழ்வான் என்ற அச்சத்தில் சில அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்குள் சிக்குண்டு இனத்தை அடியோடு அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இன்று மதத்திற்காக தம் இனத்தையே காட்டிக்கொடுக்கும் நிலமைக்கு எம்முள் சிலர் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தான் முற்றிலும் உண்மை.
தயவுசெய்து இது போன்ற மாய வலைக்குள் வீழ்ந்து எம் இனத்துக்குள் பிரச்சினைகளை உருவாக்காமல் வாழ பழகிகொள்வோம் இல்லையேல் நீங்கள் வணங்கும் அந்த தெய்வத்தால் கூட நம்மை காப்பாற்ற முடியாது என தெரிவித்தார்.







No comments