போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையிலான மோதலில் ஒருவரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளதுடன் , மற்றுமொருவரின் ஒரு கையும் துண்டாப்பட்டுள்ளது.
பண்டாரகம வல்கம பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கர வண்டியில் வந்த இருவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டள்ளனர். அதில் ஒருவரின் இரண்டு கைகளும் துண்டாடப்பட்டது. மற்றையவரின் ஒரு கை துண்டாடப்பட்டது.
தாக்குதலாளிகளின் தாக்குதலில் இருந்து தப்பியோடிய நபர்களை வீதியில் சென்ற எவரும் காப்பாற்ற முன்வராத நிலையில் , இரண்டு கைகளும் துண்டாடப்பட்ட நபர் வீதியில் விழுந்து அவலக்குரல் எழுப்பியுள்ளார்.
மற்றைய நபர் அங்கிருந்து தப்பி சென்று பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து பாதுகாப்பு தேடியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து பாதுகாப்பு தேடிய நபரை வைத்திய சாலையில் அனுமதித்த பொலிஸார். அந்நபரின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு கைகளும் துண்டாப்பட்ட நபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
அதேவேளை தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியினுள்ளும் கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாகவும் , தாக்குதல் மேற்கொண்ட கும்பலை வழிநடத்தியவர் அண்மையில் பிணையில் வெளியே வந்த நபர் எனவும் , தாக்குதலாளிகளும் , தாக்குதலுக்கு உள்ளானவர்களும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.






No comments