Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தடைக்கட்டளையை மீறப்பெற மேல் நீதிமன்றை நாடுங்கள் என யாழ்.நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்!


மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்தது.

தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனை உள்படுத்தவேண்டுமாயின் மேல் நீதிமன்றை நாடுமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் அறிவுறுத்தினார்.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியளித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 106ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்த விண்ணப்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிகள் மற்றும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டோர் சார்பிலான சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் சேர்ப்பித்து தடை உத்தரவு கட்டளை மீள் பரிசீலனை செய்யக் கோரினர்.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் வழக்கு அழைக்கப்பட்டு பிரதிவாதிகள் சார்பிலான சமர்ப்பணங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழ் மாவட்டத்தின் ஏனைய நீதிவான் நீதிமன்றங்கள் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரிக்கவேண்டும் என்று சமர்ப்பணத்தில் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

அதற்கு பொலிஸார் கடும் ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தனர்.இருதரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், தடை உத்தரவு கட்டளையை மீளப் பெற முடியாது என்றும் பிரதிவாதிகள் சார்பிலான ஆட்சேபனையை மேல் நீதிமன்றில் முன்வைத்து வாதாடுமாறும் அறிவுறுத்தினார். 

அதேவேளை யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பொலிஸ் நிலையங்களால் , சாவகச்சேரி , பருத்தித்துறை , மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றில் தடையத்தரவு கோரப்பட்ட விண்ணப்பங்கள் , குறித்த நான்கு நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்ட விண்ணப்பத்திற்கே கடந்த வெள்ளிக்கிழமை தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

No comments