Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சீரற்ற கால நிலையால் 15 பேர் உயிரிழப்பு - 17 மாவட்டங்கள் பாதிப்பு!


நாட்டில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கி 9 பேரும் மண்சரிவு காரணமாக 4 பேரும் மின்னல் தாக்கத்தால் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மஹா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும், களுகங்கை மில்லகந்த பகுதியிலும், ஜின் கங்கை பத்தேகம பகுதியிலும், நில்வள கங்கை தல்கஹகொட பகுதியிலும், அத்தனகல ஓயா துனமலை பகுதியிலும் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக கற்பிட்டி, பாலாவி பிரதேசத்தில் நள்ளிரவு வேளையில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கிரியுல்ல நகர் மூழ்கியது

மஹாஓயா பெருக்கெடுத்து கிரியுல்ல நகரமும் மூழ்கியுள்ளதால், கொழும்பு - குருநாகல் வழித்தட இலக்கம் 5 இன் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வீதியூடாகப் பயணிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 இன்றும் கடும் மழை பெய்யும்

இன்றையதினமும், வடக்கு, வட மத்தி, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட மகாணங்களுடன், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ள திணைக்களம், மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதால், இன்று  இரவில் இருந்து மறு அறிவித்தல் வரை நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொண்டுள்ள திணைக்களம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அறிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ரம்புக்கனையில் மூவர் பலி

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, உடகலதெனிய பகுதியில் இன்று (09) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரான சுரங்கனி லக்ஷிகா (36), மகள் கசுனி மாரசிங்க (08) மற்றும் உறவினரான மதுஷிகா (13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், படையினரும் நிவாரணக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

மண்சரிவில் தாதி மரணம்
 
குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, வென்னெருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.

கடும் மழை காரணமாக இன்று (09) அதிகாலை 1.00 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

மண்சரிவுக்குள் சிக்கி காயமடைந்த மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், வீட்டிலிருந்த அவரின் தாய், சகோதரி ஆகிய இருவரும் சிறு காயங்களுடன், உயிர் தப்பியுள்ளனர்.

பல இடங்களில் மின் தடை

சீரற்ற வானிநிலை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கான பணிக்குழுக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். அரச பாடசாலைகளுக்கு பூட்டு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படும் என யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்ததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பாடசாலைகளுக்கும் பூட்டு

தற்போது நிலவுகின்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடுமையாக மழை பெய்து வருவதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற வானிலையை  பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா இல்லை என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

No comments