Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊடகவியலாளர்களை நாங்கள் பாதுகாத்தோம் - மஹிந்த பெருமிதம்!


ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட  போதெல்லாம் நாங்கள் ஊடகவியலாளர்களைப் பாதுகாத்தோம். அரசியல் குண்டர்கள் தாக்கி, ஊடகவியலாளர்களின் கெமரா கருவிகளை உடைத்த போது, நாம் அவற்றை ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு 'அசிதிசி காப்புறுதி' வழங்கும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (02) இடம்பெற்றது. 
குறித்தத நிகழ்வில் உரையாற்றும் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில் , 

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட  போதெல்லாம் நாங்கள் ஊடகவியலாளர்களைப் பாதுகாத்தோம். அரசியல் குண்டர்கள் தாக்கி, ஊடகவியலாளர்களின் கெமரா கருவிகளை உடைத்த போது, நாம் அவற்றை ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம். 89களில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் ரிச்சர்ட் டி சொய்சா தெற்கிற்கு வந்து எங்களுடன் தெற்கில் பணியாற்றினார்.

ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கலை. ஊடகங்களுக்கு நாம் பலமாக இருந்தால் ஊடகங்கள் நம்மை பலப்படுத்தும். நாங்கள் ஒருபோதும் ஊடகங்களிடம் எதையும் மறைக்கவில்லை.

ஊடகங்களிடம் இருந்து எதையாவது மறைத்தால், அது மீதான ஆர்வம் நாட்டு மக்களுக்கு அதிகரிக்கும். மறைக்க மறைக்க அதனூடாக உருவாகும் பொய்கள் அதிகம். இன்று பாராளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. ஆனால் யாரும் அவற்றை பார்ப்பதில்லை. இன்று அமைச்சரவைக்கு மாத்திரமே ஊடகவியலாளர்கள் செல்வதில்லை. அதனால்தான் அமைச்சரவையில் நடந்தவை என்று விசித்திரக் கதைகள் கூறப்படுகின்றன. அதுதான் ஊடகங்களின் மாதிரி.

எங்கள் வாழ்க்கையின் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் எம்முடன் இருந்தனர். எங்களை ஆட்சிக்கு கொண்டு வர ஊடகவியலாளர்கள் பெரும் சேவை செய்தனர்.
 ஆனால் இப்போது ஊடகங்கள் எங்களுடன் இல்லை என்று குற்றம் சாட்டுகிறோம். இது விசித்திரமானதல்ல. நம் வாழ்நாளில் நாம் அனுபவித்த ஒன்று. ஊடகங்களால் அரசாங்கம் அமைக்க முடியும். ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஆனால் ஊடகங்களால் அரசாங்கங்களை பாதுகாக்க முடியாது. அரசை நடத்துபவர்களால்தான் அரசை பாதுகாக்க முடியும். அரசாங்கத்தை காக்க ஊடகங்கள் சென்றால் ஊடகங்களுக்கு அதிக காப்புறுதி வழங்க வேண்டும். இதனை ஊடகவியலாளர்கள் புரிந்துக் கொண்டதற்கு, எமது மக்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அரச ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை என்பது ஊடகங்கள் மீது அன்றாடம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று. நாட்டில் இடம்பெறும் நல்ல விடயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எப்போதும் இருந்து வந்தது. 
எங்களுக்கு மட்டுமல்ல அநாகரிக தர்மபாலவுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. 'நாட்டில் எவ்வளவு நல்ல விடயங்கள் நடைபெற்றாலும், அவை பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என அவர் ஒருமுறை கூறினார். பத்திரிக்கையாளர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. அன்றிலிருந்து இன்று வரை ஊடகங்கள் அப்படித்தான்.

மக்களும் அப்படித்தான். தொலைக்காட்சி செய்திகளில் அபிவிருத்தி செய்தி என்று தலைப்புச் செய்தி வந்தவுடன், பார்வையாளர்கள் நாடகத்தைப் பார்க்க வேறு செனலுக்கு மாறுகிறார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு இது புரிகின்றது. நமக்குப் புரியாததுதான் பிரச்சனை.

இவற்றை சாதாரண விடயங்களாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஊடகங்களால் இன்று நாம் மட்டுமல்ல உலகமே கலக்கமடைந்துள்ளது.

ஊடகங்களுக்கு தெரியாமல் ஊடகங்களின் மூலம் பயன் பெறுவதற்கும் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு முடிந்துள்ளது. இவற்றை நாட்டை நேசிக்கும், பொறுப்புள்ள ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நாட்டு ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. ஊடகவியலாளர்கள் கூட புரிந்து கொள்ளாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன. போருக்குப் பின்னர் எங்களுக்கு அந்த அனுபவம் உண்டு. இன்று ஊடகங்களில் காட்டப்படுவதைப் பயன்படுத்தி இந்த நாட்டின் நற்பெயரை கலங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.

போரில் உயிரிழந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் அப்பாவி தமிழர்களாக சித்தரிக்கப்பட்டனர். போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அவர்கள் அந்த விடயங்களைப் பயன்படுத்தினர்.

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இந்த நாட்டில் உள்ள தூதரகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் தான் கடத்தப்பட்டதாக ஒரு பாரிய சம்பவம் நிகழ்த்தப்பட்டமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இது நடந்தமையால், இந்த நாட்டில் உள்ள அனைத்து தூதரகங்களும் மிகவும் கலக்கமடைந்தன. சில நாடுகள் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவித்தன. உலகிற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது.

ஆனால் நாட்டின் நல்ல நேரத்திற்கு, அந்த பெண் அன்று வந்து சென்ற அனைத்து இடங்களிலும் சிசிடிவி கெமராக்கள் இருந்தன. சி.ஐ.டி  பாரபட்சமின்றி விசாரித்தது. இறுதியாக, இது ஒரு புரளி என்பதை உலகிற்கு நிரூபிக்க முடிந்தது. ஆனால் அது பொய் என்று நிரூபணமானபோது எங்கள் மீது குற்றம் சாட்டியவர்கள் வருத்தம் கூட அடையவில்லை.

இவற்றிலிருந்து நாம் எதனை புரிந்து கொள்ள வேண்டும்? இந்நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்க மிக நுட்பமாகச் செயற்படும் சக்திகள் ஊடகங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பிரபலமான முடிவுகளை எடுப்பதற்கு மாறாக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்திலேயே நமது அரசாங்கம் இப்போது நுழைந்து கொண்டிருக்கிறது. அந்த கடினமான முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்தே நாட்டின் சார்பில் அந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் நாட்டின் சார்பாக பொறுப்புடன் செயற்படும் என நம்புகின்றோம்.

உங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்துகிறோம். உங்கள் எதிர்காலத்தை நாங்கள் பாதுகாக்கும் போது, நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு ஊடகவியலாளர்களாகிய நீங்கள், அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.

No comments