கொழும்பு மாநகர சபையின் 80 உறுப்பினர்கள் கடந்த 19, 20 ஆகிய திகதிகளில் வடக்கிற்கான சுற்றுப்பயணத்திற்காக ரூபா 3.4 மில்லியன் (Rs34,57,900.00) செலவிட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பு மாநகர சபை யின் ஜே.வி.பி உறுப்பினர் ஹேமந்த குமார கருத்து தெரிவிக்கையில்,
சுற்றுப்பயணத்திற்கான மதிப்பீடு ரூ. 5.5 மில்லியனாக இருந்தது, ஆனால் சில சபை உறுப்பினர்கள் அதில் பங்கேற்க மறுத்ததால் அது ரூ.3.4 மில்லியனாக மாற்றப்பட்டது.
"ஜே.வி.பி. உறுப்பினர்களான நாங்கள் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்தோம்," என்று அவர் கூறினார்.
மேற்கு மாகாண ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுடனான அனுபவப் பகிர்வாக இது அமையும் என்று கூறப்பட்டது. கொழும்பு பொது நூலகத்துடன் யாழ்ப்பாண நூலகமும் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எமக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஜெபநேசனிடமிருந்து 2022 பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு மாநகர சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சுற்றுப்பயணத்திற்கான ஹொட்டல் கட்டணம் ரூ.2.6 மில்லியன், போக்குவரத்து செலவு ரூ.394,000, விளையாட்டு ஆடைகளுக்கு ரூ.229,500, தண்ணீர் போத்தல்கள் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ரூ.200,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.