மட்டக்களப்பில் காணாமல் போன யுவதியும், அவரது சகோதரியான சிறுமியும் இளைஞர் ஒருவருடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் இளைஞனையும் யுவதியையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பை சேர்ந்த திருமணமான 28 வயதான யுவதி முகநூல் ஊடாக வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் தொடர்பினை பேணி வந்துள்ளார்.
குறித்த இளைஞன் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் , அதற்கு பண உதவி செய்யுமாறும் யுவதியிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து யுவதியும் தனது நகைகளை விற்றும் , வீட்டில் சகோதர்களுடைய பணத்தினை திருடியும் சுமார் 4 இலட்ச ரூபாய் பணத்தினை திரட்டி இளைஞனிடம் கொடுத்துள்ளார்.
அந்நிலையில் கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்க சென்ற தனது 14 வயதான சகோதரியை வீட்டிற்கு அழைத்து வர சென்ற யுவதி சிறுமியுடன் காணாமல் போயிருந்தார்.
அதனை அடுத்து பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசரணைகளின் அடிப்படையில் நாவற்குடா பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இளைஞன் ஒருவருடன் , காணாமல் போன யுவதியும் , சிறுமியும் தங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தினை பொலிஸார் சுற்றி வளைத்து , இளைஞனுடன் தங்கி இருந்த யுவதியையும் , சிறுமியையும் மீட்டனர்.
விசாரணைகளின் பின்னர் இளைஞனையும் யுவதியையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







No comments