Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொருளாதார வீழ்ச்சிக்கு பதுக்கல்களும் ஓர் காரணம்


நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடுகள் நிலவி , எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை காணப்பட்டு வருகிறது. 

எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்த சிலர் நீண்ட நேர காத்திருப்பினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகி உள்ளன. 

எரிபொருள் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக காணப்பட்டாலும் மார்ச் மாதம் அளவிலையே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளை காண முடிந்தது. 


இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்திலையே அதிகளவான எரிபொருள் விநியோகம் நடைபெற்றதாக யாழ். மாவட்ட புள்ளி விபரங்கள் அடிப்படையில் தெரியவருகிறது. 


மார்ச் மாதத்தில் டீசல் 35 இலட்சத்து 93 ஆயிரத்து 700 லீட்டரும், சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 200 லீட்டரும் , மண்ணெண்ணெய் 21 இலட்சத்து 58 ஆயிரத்து 200 லீட்டரும், சூப்பர் பெட்ரோல் 59 ஆயிரத்து 400 லீட்டரும் பெட்ரோல் 37 இலட்சத்து 81ஆயிரத்து 800 லீட்டருமாக 97 இலட்சத்து 38 ஆயிரத்து 300 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை கடந்த ஜனவரி மாதம் டீசல்  35 இலட்சத்து 44ஆயிரத்து 200 லீட்டரும் , சூப்பர் டீசல்  85ஆயிரத்து 800 லீட்டரும் , மண்ணெண்ணெய்  20 இலட்சத்து 72ஆயிரத்து 400 லீட்டரும், சூப்பர் பெட்ரோல்  79ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல்  34 இலட்சத்து 65ஆயிரம் லீட்டருமாக 92 இலட்சத்து 46ஆயிரத்து 600 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் , டீசல்  34 இலட்சத்து 32 ஆயிரம் லீட்டரும் , சூப்பர் டீசல்  72 ஆயிரத்து 600 லீட்டரும் , மண்ணெண்ணெய்  15 இலட்சத்து 77ஆயிரத்து 400 லீட்டரும் , சூப்பர் பெட்ரோல்  85 ஆயிரத்து 800 லீட்டரும் , பெட்ரோல்  33 இலட்சத்து 72 ஆயிரத்து 600 லீட்டருமாக 85 இலட்சத்து 40 ஆயிரத்து 400 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை ஏப்ரல் மாதத்தில் கடந்த 20ஆம் திகதி வரையில் டீசல்  16 இலட்சத்து 96ஆயிரத்து 200 லீட்டரும் ,  சூப்பர் டீசல்  ஒரு இலட்சத்து 5ஆயிரத்து 600 லீட்டரும் , மண்ணெண்ணெய்  8 இலட்சத்து 84ஆயிரத்து 400 லீட்டரும் , சூப்பர் பெட்ரோல்  13ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல்  19 இலட்சத்து 50ஆயிரத்து 300 லீட்டருமாக 46 இலட்சத்து 49ஆயிரத்து 700 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விபரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்திலையே அதிகளவான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் மார்ச் மாதமளவிலையே எரிபொருளுக்கான வரிசை ஏனைய மாதங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்பட்டது. 

குறித்த கால பகுதிகளில் அரசாங்கம் கொள்கலன்களில் (பரல்கள் , கான்கள்) எரிபொருள் விநியோகிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தன.

அதனால் சிறிய வான்கள் முதல் , கனரக வாகனங்கள் , JCB வாகனங்கள் என பல தரப்பட்ட வாகனங்களும் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தன. வரிசை காத்திருப்புக்கே பெருமளவான டீசல் வீணாகி இருக்கும். 

அதுமட்டும் இன்றி மின்பிறப்பாக்கிகளையும் (ஜெனரேட்டர்) சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காவி வந்து எரிபொருள் நிரப்பி சென்றதனையும் அவதானிக்க முடிந்தது. 

அதேவேளை எரிபொருள் விலையேற்றம் தட்டுப்பாடுகள் காரணமாக முச்சக்கர வண்டிகள் , வாடகை வாகனங்கள் என்பன தமது வாடகையை அதிகளவில் கட்டுப்பாடு இன்றி உயர்த்தி உள்ளனர். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் , கொழும்பு வெள்ளவத்தை என்பவற்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையில் பெற்ற வான் உரிமையாளர்கள்  தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பெற்றுக்கொள்கின்றனர். 

அவ்வாறு அதிக விலை பேசி கொழும்பு செல்லும் வான்காரர்களும் , டீசல் தட்டுப்பாடு காரணமாக வானில், கான்களில் டீசல்களை எடுத்து செல்கின்றனர். வாகனங்களில் அவ்வாறு பாதுகாப்பு அற்ற விதத்தில் எரிபொருளை கொண்டு செல்லும் போது , வாகனம் திடீரென தீப்பற்றி கொண்டாலோ , வாகனம் விபத்துக்கு உள்ளானாலோ பெரும் பாதிப்புக்கள் உயிராபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். அவ்வாறு அது மிகவும் ஆபத்தானதாக உள்ள போதிலும் , கொழும்பு சென்று யாழ் திரும்புவதற்கு வாகனத்திற்கு எரிபொருள் முழுமையாக நிரப்பினாலும் (புல் டாங்) அது போதுமானதாக இல்லாததால் அவர்கள் தம்முடன் மேலதிக எரிபொருளை எடுத்து செல்கின்றனர். 

அதேவேளை யாழ்ப்பாணம் - கொழும்பு சொகுசு பேருந்துக்களின் ஒரு வழி பயண கட்டணம் கடந்த காலங்களில் 1200 ரூபாயாக காணப்பட்டது. தற்போது 2500 க்கும் அதிகமாக காணப்படுகிறது. 

இவ்வாறாக எரிபொருள் தட்டுப்பாடு என கூறி  எரிபொருள் வரிசை நீண்டு காணப்பட்ட போதிலும் , எரிபொருள்கள் வழங்கப்பட்டே வருகின்றன. 

எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பலரும் வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமே உள்ளன. 

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது விலையேற்றம் ஏற்படலாம் என்பதனால் பலரும் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிப்பதனால் , எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. 

பதுக்கல்களும் , தேவைக்கு அதிகமான கொள்வனவும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் என்பதனை நாம் உணர தவறுகின்றோம். 

நன்றி :- மயூரப்பிரியன் 





No comments