அனைத்துலக காணாமற்போனோர் நாள் இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல்துறை யினராலும் பாதுகாப்புப் படையினராலும், ஆயுதக்குழு க்களாலும் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது.
கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பினால் இக்கோரிக்கை முதன் முதலில் ஐக்கிய நாடுகள் சபையிடம் விடுக்கப்பட்டது.
இலங்கை உட்பட உள்நாட்டு கலவரங்கள், போர்கள் நடைபெறும் நாடுகளில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்து வருகின்றன.
உலகில் நடைபெற்ற சில மோசமான காணாமல் போக செய்தல் நிகழ்வுகள்.
1.ஆர்ஜெண்டீனா : 1976-83 காலப்பகுதியில், 30,000 பேர் கடத்தப்பட்டார்கள். அகதிகளுக்கான முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். போதைமருந்துக்கு ஊக்கப்படுத்தப்பட்டார்கள். சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விமானங்களிலிருந்து ரியோ தொ ல பிளட்டா நதிக்குள் வீசப்பட்டார்கள். 1983ம் ஆண்டு 'Never Again' எனும் கமிஷன் ஆரம்பிக்கப்பட்ட போது, ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுக்கள் அன்றைய ஜுந்தா இராணுவ ஆட்சியாளர்களின் மீது சுமத்தப்பட்டது. 20 வருடங்களுக்கு பிறகே இதற்குரிய தண்டனை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு கிடைக்கப்பெற்றது.
2. போஸ்னியா : 1991-95 காலப்பகுதியில், 10,000 ற்கு மேற்பட்ட போஸ்னியர்கள் காணாமல் போனார்கள். போஸ்னிய - சேர்பிய - யூகோஸ்லாவிய யுத்தத்தில் இப்பேரவலம் நடந்தது.
3. கம்போடியா : 1975-1979 காலப்பகுதியில், கிமெர் ரூஜ் ஆட்சிக்காலத்தில், 1.7 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். அண்மையில் கிமெர் ரூஜ் தலைவர்கள் மூவருக்கு இதற்குரிய தண்டனை வழங்கப்பட்டது.
4. ஈராக் : அமெரிக்கா 2003ம் ஆண்டு படையெடுப்பை தொடக்கி கடந்த வருடம் முடிவடையும் வரை நடத்தி முடித்த யுத்தத்தில் ஈராக்கில் 15,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
5. கொரியா : 1950-1953 காலப்பகுதியில் நடைபெற்ற கொரிய யுத்தத்தில், 86,000 தென்கொரியர்கள் வடகொரியாவால் கடத்தப்பட்டனர்.
6. இலங்கை : இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இவற்றை விட ஆர்மெனியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், சிலி, சஹாரா, உகண்டா, கொசோவா, ரஷ்யா, செனகல் என மேலும் பல நாடுகளில் காணாமல் போதல் சம்பவங்களில் கணிசமாக நடந்துள்ளன.