Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கட்டுவானில் புதிதாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வீதியினை திறந்து வைத்த இராணுவ தளபதி


யாழ்ப்பாணம் கட்டுவான்- மயிலிட்டி வீதியில்   இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த 480 மீற்றர் வீதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி லித்தும் லியனகே குறித்த வீதியை திறந்து வைத்தார். 

குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 வலிகாமம் வடக்கில் சுமார் 30 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் ஒருதொகுதி கடந்த நல்லாட்சி அரசில் விடுவிக்கப்பட்டன. 

அதன்போது கட்டுவன் மயிலிட்டி வீதி விடுவிக்கப்பட்டு அதன் மேற்குப் புறமான மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டன. 

எனினும் இந்த வீதியில் இடையில் சுமார் 480 மீற்றர் வீதிப் பகுதி (மயிலிட்டி தெற்கில்) உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது. அதனை முட்கம்பி வேலியால் மூடி வளைத்து வீதியின் ஏனைய பகுதியை விடுவித்தனர்.

இதனால் அருகில் உள்ள தனியார் காணி ஊடாக மக்கள் பயணித்தனர். 

 இராணுவ முட்கம்பி வேலிக்கு பின்னால் அருகில் விமானப்படையினரின் முட்கம்பி வேலி உள்ளது. இதன் பின்னால் விமான நிலையத்தினை சுற்றி பாதுகாப்பு எல்லை மண் அரண் உள்ளது. 

இதனால் 1990 இடம்பெயர்வுக்கு முன் இருந்ததபோல வழமையான வீதி  துண்டினை விடுவிப்பதாயின் இந்த முட்கம்பி வேலியை 25 மீற்றர் நகர்த்தவேண்டும் என்பதுடன் வேலி மண் அரண் பகுதியிலேயே அமைக்கவேண்டும். 

அதனால் விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரச்சினை என காரணம் கூறி வீதியின் குறித்த பகுதியை விடுவிக்க முடியாது என படைத்தரப்பு பின்னடித்தது. 

இந் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி நாடளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த வீதி விடுவிக்க வேண்டிய விடயத்தை கூறினார். 

இதன்போது முன்னாள் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு விடயத்தை ஆராயுமாறு கோரியிருந்தார்.

இதன்பின்னர்  டோர்ன் படங்கள் எடுத்து இராணுவத்தினர், விமானப்படையினர் இது தொடர்பில் கலந்துரையாடி இராணுவத்தினர் சுமார் 6 மீற்றர் அப்பால் வேலியை நகர்த்த சம்மதம் தெரிவித்ததுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அழைத்து முடிவு எடுக்கப்பட்டது. 

இதன்பின்னர் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முதல்கட்ட வேலைகளை செய்ததுடன்  வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதி புனரமைப்பினை மேற்கொண்டனர். இந்த 480 மீற்றர் வீதியை புனரமைப்பு செய்ய  29.4 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன் 5 மீற்றர் அகலமான வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு தற்போது பாவனையில் உள்ள வீதியுடன்  இணைக்கப்பட்டது.

குறித்த வீதி புதிதாக அமைக்கப்பட்டு, பழைய வீதியுடன் இணைக்கப்படுவதால் தெல்லிப்பளையால் வருபவர்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு இலகுவாக பயணிக்க முடியும் என்பதுடன் மயிலிட்டி பகுதி மக்களும் இந்த வீதியை பயன்படுத்தி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு  செல்ல சொற்பதூரமாகும். 

அத்துடன் இங்கு  இடம்பெறும் பேருந்து சேவை மயிலிட்டி சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக கிராமக்கோட்டு சந்தியூடாக திரும்பி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வீதியால் செல்லும் பேருந்தினை திறக்கப்பட்ட வீதியூடாக செல்லுமாயின் தெல்லிப்பளை வைத்தியசாலை, தெல்லிப்பளை சந்திக்கு செல்வோருக்கும் இலகுவாக அமையும். என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பலாலி வீதி- குரும்பசிட்டி, மல்லாகம் ஊடாக யாழ்ப்பாணம் விமான நிலையம், மயிலிட்டிக்கு வருபவர்கள் கட்டுவன் மயிலிட்டி வீதியூடாக செல்லவும் முடியும். இது இலகுவான வீதியாக  அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments