கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு பெற்றோர்கள், பழைய மணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
இதேவேளை அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொண்டு தமது அதிகார நலன்களை சாதிக்க முற்படும் சில தரப்பினர் பாடசாலையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக பாடசாலை தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இதற்காக பாடசாலை குறித்து தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் அடிப்படையற்றதுமான செய்திகளை பரப்பி மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிப்புறும் வகையில் மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகள் பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுவதாகவும், கல்வித்துறையின் சுயாதீனத்தில் அரசியல் வழியாக தமது நலன்களை பெற முனையும் செயற்பாடுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும் என தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பாடசாலை அதிபருக்கு எதிரானவர்களாக காட்டிக் கொள்ளும் சில நபர்கள் பாடசாலை கடமை நேரத்தில் உள் நுழைந்து பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.