Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமிழக மீனவர்களை விடுக்க வலியுறுத்த கோரி இந்திய பிரதமருக்கு கடிதம்!


இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 16 தமிழக மீனவா்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், 

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 16 மீனவா்கள் தங்களது இயந்திரப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

இந்தச் சம்பவம் கடந்த 12 ஆம் திகதி நடந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் இந்திய மீனவா்கள் மீது இலங்கை கடற்படை அல்லது அந்த நாட்டைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படும் மூன்றாவது கைது அல்லது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

மீனவா்கள் பிரச்னை தொடா்பாக, வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தி முந்தைய கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன. இலங்கை அரசிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்று தீா்வு காண வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தேன். மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மீனவா்கள் மீது இதுபோன்று தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன.

எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நம்முடைய மீனவா்களுக்கான பாரம்பரிய உரிமையை நிரந்தரமாக உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற தாக்குதல் அல்லது கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

102 படகுகள் : தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்களின் 102 படகுகள் இலங்கை வசமுள்ளன. 6 படகுகள் விடுவிக்கப்பட்டாலும், அவை இதுவரை இந்தியா திரும்பவில்லை. எனவே, இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவா்களையும், ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்டுள்ள 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

No comments