அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பில் இழுவை வலை தொழில் மேற்கொள்ளப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
இலங்கையின் வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கச்சதீவில் இடம்பெற்ற நல்லெண்ண கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டதன் பின்னர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு தரப்பு கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அமைச்சரவையில் பிரஸ்தாபிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோன்று, காரைக்கால், நாகப்பட்டினம், புதுகோட்டை போன்ற பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தினர்.
இச்சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் எம். சி. முணுச்சாமி, பாதிய ஜனதா கட்சியின் நாகபட்டினம் மாவட்ட தலைவர் திரு. அருணாசலம், திராவிட முன்னேற்ற கட்சியின் நாகபட்டினம் மாவட்ட பதில் தலைவர் ஜி. மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களை புரிந்து கொள்வதாகவும், சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
No comments