Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். ஒருவருக்கு மலேரியா


யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில்,

இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை.

ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. 

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் 15 பேர் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்டத்திலும், மேற்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்று திரும்பிய உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் எமது நாட்டில் 14 வருடங்களுக்குப் பின்னர் மலேரியா நோயினால் ஒரு இறப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

பேருவளை பிரதேசத்தில் இருந்து இரத்தினக்கல் வியாபார நோக்கத்திற்காக ஆபிரிக்கா சென்று திரும்பிய ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

எமது நாட்டில் மலேரியா நோயைப் பரப்பும் நுளம்புகள் உலர் வலயப் பிரதேசங்களில் இன்னமும் காணப்படுகின்றன.

 இந்நிலையில் மலேரியா பரம்பல் உள்ள நாடொன்றுக்கு சென்று அங்கு நோய் தொற்றுக்குள்ளாகி வருபவர்கள் மூலம் உள்ளுரில் மலேரியா பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெளிநாடொன்றில் மலேரியா தொற்றுக்குள்ளாகும் ஒருவருக்கு ஒரு வருட காலம் வரை எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாது காணப்படலாம். 

ஆனால் அவர் மூலம் ஏனையவர்களுக்கு இந் நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மலேரியா தடுப்பு மருந்தகளைப் பாவிக்க வேண்டும்.

தற்போது, தென்னாபிரிக்கா, உகண்டா, சூடான், ரூவண்டா, மொசாம்பிக், மடகஸ்கார், மத்திய ஆபிரிக்க குடியரசு, கானா, சைபீரியா, தன்சானியா, சிம்பாவே, பப்புவா நியூகினியா, சீரோலியான், சவுதி அரேபியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மலேரியா பரம்பல் காணப்படுகிறது 

எனவே மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் மலேரியா தடுப்பு மருந்தை பாவிக்க தொடங்குவதன் மூலம் மலேரியா தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இத்தடுப்பு மருந்துகளைத் தங்களுக்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது யாழ்ப்பாணம் பண்ணை சுகாதார கிராமத்திலுள்ள மலேரியா தடை இயக்க பணிமனையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பிவந்த பின்னர் மலேரியா குருதிப் பரிசோதனையை கிரமமாக செய்வதன் மூலம் மலேரியா தொற்று உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே எமது நாட்டில் மலேரியா நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் வேண்டிநிற்கின்றோம் - என்றுள்ளது.

No comments