நாடாளுமன்றம் இணங்காவிட்டால், 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் பலவந்தமாக முழுமையாக அமுல்படுத்தாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நாடாமன்றின் அனுமதியைத்தான் ஜனாதிபதி கோரியிருந்தார்.
எந்தவொரு கட்சியினதோ அல்லது தனி ஒரு உறுப்பினரினதோ அனுமதியின்றி, ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் 13 தொடர்பாக எந்தநிலைப்பாட்டில் உள்ளது என்பதே முக்கியமாகும்.
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதா அல்லது அதற்கு Nதுவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்பதற்கு நாடாளுமன்றின் அனுமதி தேவைப்படுகிறது.
நாடாளுமன்றம் இதற்கு இணங்காவிட்டால் திருத்தங்களை சட்டமாக்க முடியாது.
மேலும், 13 இற்கு நாடாளுமன்றம் உடன்படவில்லை என்றால் பலவந்தமாக இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாம் பல தசாப்தகாலமாக குண்டுச் சத்தத்துடனும் துன்பத்துடனும் வாழ்ந்தவர்கள்.
இந்த நிலையில், இவரது கருத்தானது சில அடிப்படைவாதிகளால், நாட்டின் கீர்த்தியை சீர்க்குலைக்க பயன்படுத்தப்படும் அபாயமும் காணப்படுகிறது.
சர்வதேச ரீதியாக இது தாக்கத்தை செலுத்தும். நாம் இதுவரை அனுபவித்த துன்பங்களே போதும்.
இனவாதம், மதவாதம் உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு சாதகமான அடிப்படைவாதக் கருத்துக்களை அனைத்து மக்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
குரோத பேச்சுக்களால் நாட்டில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டால் நாம் அனைவரும்தான் பொதுவாக பாதிப்படைவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments