யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் சனிக்கிழமை உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து வான் ஒன்றில் யாழ்ப்பாணம் வந்த 12 பேர் அடங்கிய கும்பலே வியாபாரியை கடத்தி சென்றதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட நபர் , நபர் ஒருவரிடம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் , அதனை மீள செலுத்தாத நிலையில் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்த நிலையில், குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடத்தல் கும்பல் கிளிநொச்சியில் மறைந்திருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு விரைந்த பொலிஸார் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்டவரையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments