தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம்(20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இவ் வழக்கை நீதவான் நீதிமன்ற நீதவான் தள்ளுபடி செய்தார்.
அதேவேளை நினைவேந்தலுக்கு தடை கோரி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றங்களில் கடந்த தினங்களில் தொடரப்பட்ட வழக்குகளும் அந்த நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments