யாழ்ப்பாணத்தில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் கூடைப்பந்தாட்ட திடல் அமைந்துள்ள பகுதிகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக காணபப்டுவதனால் , தேசிய ரீதியாக போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. அதற்காக நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் வீரர்கள் , பயிற்சிவிப்பாளர்கள் , அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
போட்டி நடைபெறவுள்ள மைதான திடல் பகுதிகளில் அதிகளவான குப்பைகள் ,பொலித்தீன்கள், வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
இதேவேளை மலசல கூடங்கள் பாவிக்க முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது. அதனால் போட்டிகளில் கலந்து கொள்ள வந்துள்ளவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தேசிய மட்ட போட்டிகள் நடைபெறவுள்ள இடத்தினை சுற்றமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது போட்டி ஏற்பாட்டாளர்களின் கடமைகளில் ஒன்றாகும். அதனை ஏற்பாட்டாளர்கள் செய்ய தவறியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , போட்டி ஏற்பாட்டாளர்கள் அப்பகுதிகளை சுத்தம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கழிவு பொருட்களை சேகரிப்பதற்கும் , அவற்றை தரம் பிரித்து போடுவதற்கும் ஏற்பாடுகளை செய்யுமாறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைகளை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யும் ஊழியர்கள் சிரட்டைக்குள் நீர் நின்றாலும் பெரும் குற்றம் போல் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவர்கள் , இவ்வாறான இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments