Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

என்னை அழைத்தது ஒரு முரண்நகை


“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என தொனிப்பொருளில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் கருத்துரை வழங்க இருந்தார். 

அந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் நடைபெற்ற புத்தக வெளியீடு ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் , பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பை வெளியிட்டமையால் சட்டத்தரணியின் கருத்துரை நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் சடடத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், 

சமகால பிரச்சினைகளுக்கான சட்ட மன்றத்தின் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என்ற விரிவுரை இரத்து செய்யப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எழுதப்படும் கடிதம்.

இந்த விரிவுரை திடீரென ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எழுப்பப்படும் ஊடகக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பொதுக் கடிதத்தை எழுதுகிறேன்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு பாரதூரமான பிரச்சினையை எழுப்பவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த பொதுக்கடிதத்தை உரிய முறையில் பரிசீலிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

31 ஒக்டோபர் 2023 அன்று “நெருக்கடியான காலத்தில் நீதித்துறை சுதந்திரம்”என்ற தலைப்பில் சட்டத்துறைத் தலைவரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் பேச அழைக்கப்பட்டேன். மூன்று காரணங்களுக்காக நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். முதலாவதாக, நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதோடு தொடர்ந்து நீதிமன்றங்களோடு ஈடுபாட்டில் இருக்கிறேன். இரண்டாவதாக, இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திப்பதற்கும், கருத்துக்கள், கோட்பாடுகள் பற்றியும் அவை நடைமுறையில் எவ்வாறு வெளிவருகின்றன என்பதைப் பற்றியும் கலந்துரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நான் எண்ணினேன். மூன்றாவது அண்மை காலத்தில் சிங்கள தேசியவாதிகளிடம் இருந்து இனரீதியான அச்சுறுத்தல்களின் பிரகாரம் பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு சரவணராஜவின் பதவி விலகலுக்குக் காரணாமாக இருந்த இனரீதியான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திலும் நான் ஈடுபட்டிருந்தேன்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, எனது விரிவுரைக்கு ஒரு நாள் முன்னதாக, நான் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றப் போவது தொடர்பில் மாணவர் சங்கம் அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்று சட்டத்துறைத் தலைவர் என்னிடம் தெரிவித்தார். கடந்த மாதம் நான் ஆற்றிய மற்றுமொரு உரையில் விடுதலைப் புலிகளை ஒரு பாசிச அமைப்பாகக் கட்டமைத்திருந்தேன் என்பதுதான் இந்த அதிருப்திக்கான காரணம் என்று கூறினார். எப்படியிருந்தாலும், விரிவுரை திட்டமிடப்பட்டவாறே இடம்பெறும் என்று அவர் என்னிடம் கூறினார்.

விரிவுரை நடைபெறும் நாளில், பேசுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனி நிகழ்வை நடத்துவது சாத்தியமில்லை என்று சட்டத்துறைத் தலைவர் எனக்கு தெரிவித்தார்.

எனவே பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிகழ்வை நடத்த கலைப் பீடத்தின் பீடாதிபதி அழைப்பு விடுத்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இடத்தை மாற்றுவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று துறைத் தலைவரிடம் தெரிவித்தேன். நான் பல்கலைக்கழகத்திற்கு வந்ததும், பீடாதிபதியை சந்திக்க விரும்புவதாகவும் நான் கேட்டுக் கொண்டேன்.

பீடாதிபதியை சந்தித்த போது பதில் துணைவேந்தரும் தானும் இந்த நிகழ்வை‘ஒத்திவைக்க’ முடிவு செய்திருப்பதாகவும், ‘அசௌகரியத்தை (unpleasant)’தவிர்க்க விரும்பியதால் அவர்களால் இந் நிகழ்வை நடத்த முடியாது என்றும் பீடாதிபதி என்னிடம் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசியதாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்த மாற்று வழிகளை அவர்களுக்கு அளித்ததாகவும் பீடாதிபதி என்னிடம் தெரிவித்தார். எனினும் இந்த நிகழ்வு தொடரக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தனர் என்றும் மாணவர்கள்‘தீவிர உணர்வுகளுடன் (extreme emotions)’ செயல்படுவதாகவும், அவர்கள்‘முதிர்ச்சியற்ற (immature)’ முறையில் நடந்துகொள்ளுவதாகவும் அவர் கூறினார்.

நானும் ‘அதீத உணர்ச்சிகளின்’ கீழ் அறிக்கைகளை வெளியிட்டேன் என்றும், எனது முந்தைய உரையில் விடுதலைப் புலிகளை அந்த வகையில் நான் பரந்த அளவில் வர்ணித்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். என்னுடன் தனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்னை அழைக்க தான் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

பதிலுக்கு, ஒரு நிகழ்வைக் கூட நடத்த முடியாத நிலையில், நான் ‘தீவிரஉணர்ச்சிகளுடன்’ பேசினேன் என எனக்கு விரிவுரை செய்யக்கூடிய ஒரு இடத்தில் அவர் இல்லை என்று நான் பீடாதிபதியிடம் கூறினேன். இந்த நிகழ்வை இரத்துச் செய்ததன் மூலம் பல்கலைகழக நிர்வாகம் புலிகளின் கருத்துக்கு மாறான கருத்துக்களை பல்கலைகழகத்திற்குள் அனுமதிக்காது என்ற செய்தியை எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அனுப்பியுள்ளதாக நான் மேலும் கூறினேன்.

பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை என்று நான் மேலும் கூறினேன். நிகழ்வைத் தொடருமாறு நான் பீடாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனது விரிவுரையை இரத்துச் செய்யும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்ததன் மூலம், பல்கலைக்கழகத்திற்குள் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிராக ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பரந்தளவில், மாணவர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகம், ஜனநாயக வெளியின் மீதான இந்த அப்பட்டமான பாதிப்புக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்றும், இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நடப்பதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

எனது பங்கிற்கு, பீடாதிபதி உறுதியளித்த அதே விரிவுரைத் தொடருக்கான’ஒத்திவைக்கப்பட்ட’அழைப்பிற்காக நான் காத்திருக்கிறேன். இந்த விடயத்தில் தாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் எனது கருத்தைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இடமளிப்பீர்கள் எனவும், வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உடையவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எந்தத் தடையும் இல்லாமல் உரையாடல்களிலும், விவாதங்களிலும் ஈடுபடுவதற்கான கலாசாரம் ஒன்று நிலவுவதனை உறுதி செய்வீர்கள் எனவும் நம்புகின்றேன் – என்றுள்ளது.

No comments