Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீதி விபத்துக்களினால் இந்த ஆண்டில் 115 சிறுவர்கள் மரணம்!


வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய வீதிப் பாதுகாப்பு மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றியபோதே  இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில் நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன.

இங்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில், வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசித்தோம். அது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் ஜனாதிபதியினால் நிறுவப்பட்ட உயர்மட்ட குழு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். கவனமின்றி வாகனம் செலுத்துதல், முச்சக்கரவண்டி போன்ற சில வாகனங்கள் உரிய பாதுகாப்பு தரம் உறுதிப்படுத்தப்படாது இருத்தல் போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான சவால்களை எவ்வாறு வெற்றிக்கொள்ள முடியும் என்பதை அறிய வேண்டும்.

பெருமளவான மக்களின் வாழ்வாதாரமாக முச்சக்கர வண்டியே காணப்படுகிறது. பலருடைய போக்குவரத்து தேவைகளும் அதன் மீதே தங்கியுள்ளது. அதனால் நாடு பொருளாதார ரீதியாக பலமடையும் வரையில் முச்சக்கர வண்டிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்று அவசியம். அதற்காக சிறிது காலம் தேவைப்படும். அதேபோல் வீதிகளின் தன்மை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் வீதிக் கட்டமைப்புக்கள் பெருமளவில் மேம்படுத்தப்படவில்லை. தெற்கு அதிவேக வீதியில் மழைக்காலத்தில் நீர் நிரம்பிவிடுகிறது. உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அல்லது வாகனத்தை செலுத்திச் செல்லும் போது ஏற்படும் தூக்கக் கலக்கத்தை போக்க வாகனத்தை சிறிது நேரம் தரித்துச் செல்வதற்கான வழித்தடமொன்று இருக்குமாயின் அச்சுறுத்தலான நிலைமை உருவாகாது.

அதேபோல் விபத்துக்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போதும் பிரச்சினைகள் எழுகின்றன. அவர்களுக்கு போதியளவில் பணிக்குழாம் இல்லாமை தொழில்நுட்பங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகள் அவசியமாகும்.

வாகன இறக்குமதி தொடர்பான கொள்கை தயாரிப்பிற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான திறந்த கொள்கையொன்று பின்பற்றப்பட வேண்டுமா அல்லது சிங்கப்பூரை போன்று வருடாந்தம் குறித்தளவு அனுமதிப் பத்திரங்களை மாத்திரம் பயன்படுத்தும் முறைமைக்குச் செல்ல வேண்டுமா என்பது தொடர்பில் ஆராய்கிறோம்.

அதேபோல் வீதிகளில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை சீராக பேணவேண்டுமெனில் குறித்த தொகை வாகனத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய அவசியமும் உள்ளது. அத்தோடு வழமையான டீசல், பெற்றோல் வாகனங்களுக்கு மாறாக இலத்திரனியல் வாகனங்களின் பயன்பாடு குறித்தும் சிந்திக்கவேண்டும். இதன்போது எதிர்கால பொருளாதார நிலைமை மற்றும் வீதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும்.

அதேபோல் வீதி விபத்து என்ற விடயமும் இங்கு முக்கியமானது. வீதி விபத்துக்கள், அதனை அண்டிய மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக பேச்சுவார்த்தைக்காக இலங்கை மருத்துவ சங்கத்தின், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான குழு மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பொன்றும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நிபுணத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் சமன் தர்மரத்ன,

வீதி விபத்துக்களால் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 42 செக்கன்களுக்கு ஒரு மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் உயர் வருமானம் ஈட்டும் நாடுகளில் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 115 சிறுவர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 15-44 வயது வரையான இளைஞர்களே வீதி விபத்துக்களால் இறக்கின்றமை அல்லது அங்கவீனமாவதை காண முடிகிறது. அத்தோடு வருடாந்தம் 3000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதோடு அந்த எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பைக் காட்டுகின்றது. அவற்றை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கிலான மரணங்களும், அங்கவீனமடைதலும் வீதி விபத்துக்களினால் நிகழ முடியும் என்பதோடு, அதனால் பல பில்லியன் ரூபாய்களை நாடு இழக்க நேரிடும். இந்த நிலையை கருத்தில் கொண்டு வீதி விபத்துக்களையும் அதனால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலையும் கட்டுப்படுத்துவதற்கான செயலணியொன்றையும் உருவாக்க வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

No comments