மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள மன கணித சர்வதேச மட்ட போட்டியில், இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் அவர்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து 25 மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
கோலாலம்பூரில் எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை முழுவதும் UCMAS Abacus மூல பயிற்சி நெறியைப் பயிலும் மாணவர்களிலிருந்து திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 62 மாணவர்களைக் கொண்ட ஒரு குழு மலேசிய செல்லவுள்ளது.
இந்த இளம் திறமையாளர்கள் 8 நிமிடங்களில் 200 கணக்குகளைத் துல்லியமாகவும் வேகமாகவும் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் எனவும், கடந்த காலங்களில் பல இலங்கை மாணவர்கள் தமது திறமைகளை இந்த அரங்கில் நிரூபித்துள்ளனர்.
அதேவேளை அண்மையில் கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் நாடு முழுவதுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments