யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கச்சாய் பகுதியில் கடந்த 06ஆம் திகதி பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற பெண் அணிந்திருந்த, 2 பவுண் தங்க சங்கிலியை , மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்று இருந்தார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது CCTV கமராவில் பதிவான காட்சி ஒன்றின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை இனம் கண்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அறுக்கப்பட்ட சங்கிலி , சங்கிலி அறுக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அன்றைய தினம் அணிந்திருந்த உடைகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்தியதை அடுத்து , எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது .
No comments