Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன ; 95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில்


நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன.

ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படுகிறது. விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட சுமார் 1500 வைத்தியர்கள் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்துக்குள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். 

இது நாட்டிலுள்ள மொத்த வைத்தியர்களில் நூற்றுக்கு 5 சதவீதமாகும். 2022இல் காணப்பட்ட மொத்த வைத்தியர்களில் 5 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அடுத்து நாம் எதிர்கொள்ளவுள்ள அபாயம் யாதெனில் வைத்தியர்களுக்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள 5000 பேர் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருக்கின்றனர். 

எனவே இவற்றை தடுப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த வைத்திய கட்டமைப்பிலிருந்து 5000 பேரை ஒரே சந்தர்ப்பத்தில் இழக்க நேரிட்டால் அது நூற்றுக்கு 25 சதவீத இழப்பாகும். 

ஒரே சந்தர்ப்பத்தில் வைத்திய கட்டமைப்பில் 25 சதவீத மனித வலுவை இழக்க நேரிட்டால், அதனை இலகுவில் ஈடுசெய்யவோ, தாங்கிக்கொள்ளவோ முடியாது.

இந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் மதிப்பீடுகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. மயக்க மருந்து நிபுணர்கள் இன்மையால், அது தொடர்பான நிபுணத்துவமற்ற வைத்தியர்களே மயக்க மருந்துகளை வழங்கி, சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், புத்தளம், நுவரெலியா மாவட்டங்களிலும் பெரும்பாலான வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை தவிர, மேலும் 44 வைத்தியசாலைகளில் பட்டதாரி வைத்தியர்கள் இன்றி பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களால் மாத்திரம் சேவைகள் வழங்கப்படும் நிலைமை காணப்படுகிறது. 

யுத்த காலத்தில் காணப்பட்டதை விடவும் மோசமான நிலைமைக்கு வைத்திய கட்டமைப்பு சென்றுகொண்டிருக்கிறது.

எனவே, ஆட்சியாளர்கள் இப்போதாவது முற்போக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அது மாத்திரமின்றி, ஏற்கனவே மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக இனிவரும் காலங்களில் 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தை அடைந்துள்ளன. 

ஒன்று அல்லது இரண்டு வைத்தியர்களுடன் இயங்கும் வைத்தியசாலைகளே இந்த நிலைமையில் காணப்படுகின்றன. அவற்றிலுள்ள வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவோ அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளவோ எதிர்பார்த்துள்ளனர். 

சேவை வழங்கிக்கொண்டிருக்கும் ஓரிரு வைத்தியர்களும் இவ்வாறு வெளியேறிவிட்டால் அந்த வைத்தியசாலைகளை மூடுவதைத் தவிர மாற்று வழியில்லை.

அத்தோடு 150 வைத்தியசாலைகளில் எதிர்பார்க்கும் சேவைகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதாவது இதற்கு முன்னர் நாளொன்றில் 10 சத்திர சிகிச்சைகளேனும் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகளில், இன்று அந்த சேவைகளை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 

இதே போன்று மேலும் 168 வைத்தியசாலைகள் இவ்வாறு சேவைகள் முடங்கக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாவிட்டால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம் என எச்சரிக்கின்றோம் என்றார்.

No comments