யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு செல்லும் பெண்களிடம் ஆள்நடமாட்டம் குறைந்த நேரத்தை பயன்படுத்தி , வழிப்பறியில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வந்துள்ளது.
குறித்த கும்பலால் சங்கிலி உள்ளிட்ட நகைகள் , பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் , கைப்பைகள் , அவற்றில் இருந்த வங்கி அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் பெரும் தொகையான பணம் என்பவை வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்த நிலையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கொட்டடியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுண் சங்கிலி, சில கைப்பைகள் , சில அலைபேசி மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments