வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மேலும் சில சாட்சிகள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , சில சாட்சியங்கள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன.
அதனை அடுத்து வழக்கினை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், மறுநாள் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்பும் திகதியிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு , கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை அவர்களை 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களாலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த இரு தவணைகளிலும் , சட்ட வைத்திய அதிகாரி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் , உயிரிழந்த இளைஞனின் தந்தை , சகோதரன் , உள்ளிட்ட 10 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
No comments