முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள், 1994 முதல் 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டவை என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழங்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்தாண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்றன.
இதன்போது 17 உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்தாண்டு நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த நடவடிக்கை ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், 40 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த அகழ்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம், மனித புதைக்குழிக்கு மேற்காக இரண்டு மீற்றர் நீளத்திற்கு மனித எச்சங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments