புகையிரத கடவைகளை மக்கள் கடக்கும் போது, நிதானித்து ,அவதானித்து நின்று பயணிப்பது பாதுகாப்பை தரும் என்கிற விழிப்புணர்வை அனைத்து தரப்பினரும் இணைந்து கிராம மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று மாத குழந்தையும் , தந்தையும் உயிரிழந்துள்ள நிலையில் , தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பல தடவைகள் இவ்வாறான விபத்துக்கள் வடக்கின் பல பகுதிகளில் நடந்து இருந்தாலும், மேலும் இப்படியான மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்தோம் ? என எம்மை நாமே கேட்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
புகையிரத விபத்து மரணங்கள் இதுவரை பாதுகாப்பற்ற புகையிரத கடவை , பொது மக்களின் அசண்டையீனம் ஆகியவற்றால் அதிகம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் பொலிசாருக்கு சொன்னோம், புகையிரததிணைக்களத்திற்கு சொன்னோம், முறைப்பாடுகள்வழங்கினோம், என்பதை விட சமூக அக்கறையோடு பொதுமக்கள் ரயில் கடவைகளில் நிதானித்து, ,அவதானித்து நின்று பயணிப்பது பாதுகாப்பை தரும் என்கிற செய்தி தொடர்பில் விழிப்புணர்வை சமூகமட்ட அமைப்புக்கள், துறைசார் அரச நிறுவனங்கள்,அரசசார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து கிராம மட்டங்களிலே ஏற்படுத்தவேண்டும்.
அதே நேரம் எம்மண்ணில் இனிவரும் காலங்களில் இவ்வாறான துன்பகரமான ரயில் விபத்து சம்பவங்கள் இடம்பெறாதிருக்க கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து ஒவ்வொரு மக்கள் செறிவு மிக்க பகுதிகளிலும் பாதுகாப்பான ரயில் கடவைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென சனாதிபதி,அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் அனைவரும் அக்கறையோடு செயற்படுவதால் பல உயிர்களை எதிர்காலத்தில் காத்திடமுடியும் என்றார்.
No comments