யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் , பொலிஸ் நிலையத்தில் அவர்களை தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவரை கைது செய்தனர்.
பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை . நாவாந்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியுடன் தப்பியோடியவரை பொலிஸார் துரத்திய போது , முச்சக்கர வண்டியை , நாவாந்துறை சந்தை பகுதியில் கைவிட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவ்வேளை முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து 300 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.
அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் , முச்சக்கர வண்டியையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments